ஏறு மயில் ஏறி - திருப்புகழ்

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று

ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று

கூடும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று

குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று

மாறு படு சூரரை வடித்த முகம் ஒன்று

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று

ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே!


விளக்கம்:
ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு
முகம்தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு
முகம்தான்.

உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும்
தீர்த்துவைப்பது உன் ஒரு முகம்தான். கிரெளஞ்ச மலையை
உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதிகாத்ததும் உன் ஒரு
முகம்தான்.

உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன்
ஒரு முகம்தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து
ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம்தான்.

... அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை
நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மைவாய்ந்த
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.



No comments